Saturday, February 9, 2013

பெற்றோரின் கடமைகள்

               பெற்றோரின் கடமைகள்  
 


ஒவ்வொரு குழந்தையும் எலும்புகள் மூடப்பட்ட ஒரு சதைத் தொகுப்பாகவே அண்டத்தில் அவதரிக்கின்றன. அதில் மனித குணமும் மிருக குணமும் சரி பாதியாகவே உள்ளது. குழந்தை மனிதனாவதும் மிருகமாவதும் அது வளரும் சூழலையே சார்ந்துள்ளது. நானும் நீங்களும் எதைத் தெரிந்து கொண்டு பிறந்தோம். இப்பொழுது எதைத் தெரிந்து கொண்டுள்ளோம் என்பது நாம் வளர்க்கப்பட்ட சூழலாலேயே தீர்மானிக்கப்பட்டது.


அன்பாக வளர்க்கப்படும் குழந்தை பிறரிடம் அன்பையே வெளிப்படுத்தும். அடித்து வளர்க்கப்படும் குழந்தை சமூகத்தைக் கண்டு அஞ்சும். போற்றி வளர்க்கப்படும் குழந்தை பிறறையும் போற்றும். தூற்றி வளர்க்கப்படும் குழந்தை துஸ்டனாகும். அடக்கி வளர்க்கப்படும் குழந்தை பிற்காலத்தில் உங்களையும் பிறரையும் அடிக்கும். இவை சாபமில்லை, வரலாற்று உண்மைகள்; வாழ்வியல் கலைகள்.

தன் பிள்ளைக்கு, சரியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. நாட்டு சூழழும், சமுதாய சூழழும் பாதகமாக இருந்தாலும் வீட்டின் சூழலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவள் தாய். தமிழ் பேசும் நல்லுலகம் குடும்பத் தலைவரை திரைகடல் ஓடி திரவியம் தேடுபவராகவும் (தற்போது பெண்களும் தேடுகிறார்கள்) தாயை சிறந்த தலைவியாகவும் பிள்ளைகளை பொருள் பொதிந்த சிற்பமாக செதுக்கும் சிற்பியாகவும் ஆசானாகவும் வர்ணிக்கிறது.

கல்வியறிவுடைய தாய் தன் குழந்தையை சான்றோனாக மாற்றுவாள். தாய் பெறும் இன்பத்தை வள்ளுவன்

“ஈன்ற பொழுதினிம் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” ; என்றார்.

பிரசவம் என்பது தோழர்களே, தாய்மைக்குக் கிடைக்கும் மறுஜென்மம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனி அம்சம். அப்படிப்பட்ட மறுபிறப்பிலே, தன்னையே உரித்துக் கொண்டு பிறந்த குழந்தையைப் பார்த்ததும் அவள் உணரும் சந்தோசத்தை எழுத்துக்களால் வடிக்க முடியுமா.

அத்தகைய தாய் தன் குழந்தையை முதல் முறையாகப் பார்த்த பொழுது அடைந்த சந்தோசத்தை விட தன் மகனை(அ)மகளைப் பிறர் சான்றோன்(அறிவிலும் மனித விழுமியங்களிளும் சிறந்தவன்) என்று சொல்லக் கேட்கும் பொழுது அடையும் சந்தோசமே அதிகம் என்பதே குறளின் பொருள். ஏழைத் தாயோ, பணக்காரத் தாயோ இருக்கும் இடங்கள் வேறுபடலாம். காட்டும் அன்பு ஒன்று தானே.

தாய்குலத்தை போற்றும் நான் தந்தையரை தூற்ற விழயவில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஓர் இதயம் உள்ளது. இதைக் கையாழும் பக்குவத்தில் தான் நண்பனே, அன்பு வெளிப்படும். நாம் நம் குழந்தைகளிடம் வைத்திருக்கும் பாசத்தில் வேசமில்லை; கலப்படமில்லை. 100 சதவிகித உண்மையான கண்டிப்புடன் கூடிய அன்பு. ஆனால் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் விகிதாச்சாரம் முழுவதும் பிழையானது. நீங்கள் சமூகத்தில் உயர்ந்த மனிதராகவோ, அலுவலகத்தில் உயர் பதவி வகிப்பவராகவோ, மக்கள் பிரதிநிதியாகவோ கூட இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது, ஒரு சாதாரண தகப்பனின் உணர்வுப் பாரிமாற்றத்தையே.

ஒழுங்கா முழுவதையும் சாப்பிடல புள்ளபுடிக்கிறவன்ட புடிச்சுக் குடுத்திருவன் என்று அன்று கூறிய தாய்மார்கள் இன்று, ஒழுங்கா முழுவதையும் சாப்பிடல அப்பாட்ட புடிச்சுக் குடுத்திருவன் என்று சொல்லும் அளவிற்கே உங்கள் பாசம் பகிரப்படுகிறது.

அடித்தொண்டையை செருமிக்கொண்டு கஸ்டப் பட்டு கடினமான வார்த்தைகளை பொறுக்கி எடுத்துக் கதைக்காதீர்கள். மனதைத் திறந்து விடுங்கள். கௌரவம், இயலாமை போன்ற இருட்டுப் போர்வைகளால் இதயத்தை மூடிக்கொண்டு, எனக்கு நேரமில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். அன்பெனும் விளக்கின் திரியை சிறிதளவு தூண்டினால் போதும் வாழ்க்கை இனிக்கும்.

வாழ்க்கையை வாழ்வோம்; வாழ்க்கையில் உயிரோடு வாழ்வோம்.

No comments:

Post a Comment