Wednesday, March 20, 2013

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை



பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு ஓடுவது, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும், பெற்றோரை தவிக்க விட்டும், சென்று விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படி, கடந்த ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில், பல மாணவியர், போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின் பெற்றோரை அழைத்து, பேச்சுவார்த்தை மட்டுமின்றி, மாணவியருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், அவர்கள் மீண்டும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி பொதுத் தேர்வு முடிந்த நிலையில், வீட்டை விட்டு, வெளியேரிய, மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதில், திருச்சி முதலிடத்தை பெற்றது. தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு, இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், மார்ச் 27ம் தேதி, தேர்வு, முடிவுக்கு வருகிறது. அன்றே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. தேர்வு முடியும் நிலையில், காதலர்களுடன் தலைமறைவாகும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை போலீசார், அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதில், தேர்வு மையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் இளம் ஜோடிகளிடம், விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், அங்குள்ள தங்கும் விடுதிகள், கோவில்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றையும் கண்காணிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம், தெளிவாக விசாரணை நடத்தி, அவர்கள் குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, பெற்றோரை அழைத்து ஒப்படைக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிந்த நிலையில் காதலர்களுடன், "எஸ்கேப்’ ஆன மாணவியரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது. சில இடங்களில், இளசுகளின் நடவடிக்கையால், ஜாதி, மத ரீதியிலான மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதை அடுத்து, நடப்பாண்டில் இது போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். மாணவ, மாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு, பிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள், பணம், வங்கியின் ஏ.டி.எம்., கார்டு, செக் புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக மாணவ, மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நிலையிலும், முடிந்த பின்னரும் அவர்களின் தோழிகள், பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவ, மாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில், அந்த பணத்துக்கான தேவை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவனோ, மாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடு, அவர்களின் புகைப்படங்களை வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், தொடர்புகள் குறித்து முழு விவரங்களையும், போலீசாரிடம், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்தால், நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு முடிவுக்கு வரும் நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment